மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி யாக ரத்து செய்துள்ளது. இச்சட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி இயற்றப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இதனை மேம்படுத்தி அறிவிப்பு வெளியானது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு மதுரை கிளையிலிருந்து விசாரித்தனர்.
எம்.பி.சி. பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவில் உள்ள 22 சாதி களுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று வாதிடப்பட்டது. சாதிவாரிக் கணக் கெடுப்பு இல்லாமல் உள்ஒதுக்கீடு சாத்திய மில்லை என்றும், தேர்தல் நெருங்கிய வேளையில் அறிவிப்பு வெளியானது குறித்தும் மனுதாரர் தரப்பு சந்தேகம் கிளப்பியது.
தமிழ்நாடு அரசுத்.தரப்பில், பிற்படுத் தப்பட்டோர் நல ஆணையம் 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்களாக இருப்பதாகக் கிடைக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இடையீட்டு மனுதாரரான பா.ம.க. தலைவர் மருத்துவர் எஸ். ராமதாஸ் தரப்பிலும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
விசாரணையின் இறுதியில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், ஏற்கனவே வன்னியர் உள் ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட உத்தரவுகளும் ரத்தாகிவிடும் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
இவ்வழக்கின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் முருகேந்திரன் கூறுகையில், "தமிழகத்தில் எம்.பி.சி. பிரிவில் 20 சதவீதம் கொடுப்பட் டுள்ளதை, 10.5% வன்னியர்களுக்கும், 7 சதவீதம் எம்.பி.சி. (டி.என்.சி.)க்கும், 2.5 சதவீதத்தை பிற எம்.பி.சி. பிரிவினருக்கும் ஒதுக்கியிருந்தனர். இதில், ஒரே பிரிவினர்களுக்கு மட்டுமே 10.5 சதவீதம் என ஒதுக்கீடு செய்துவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு 9.5 சதவீதம் மட்டுமே என்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும்? எடுத்துக் காட்டாக, எம்.பி.சி. பிரிவினர்களுக்கு 3 சீட் கல்லூரிக்கு என்றால், 10.5 சதவீதமுள்ளவர் களுக்கு 2 சீட்டும், 7 சதவீதமுள்ளவர்களுக்கு 1 சீட்டும் கிடைக்கக்கூடும். 2.5 சதவீதமுள்ளவர் களுக்கு எந்த வாய்ப்பும் கிட்டாமல் போகும். ஆகையால் 20 சதவீதமும் முழுமையாக இருந் தால்தான் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டும்.
தற்போது இந்த 10.5 சதவீத அடிப்படை யில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை என்னவாகுமென்பது போலவே, இந்த உள் ஒதுக்கீடு காரணமாக, வாய்ப்பு கிடைக்காமல் போன மாணவர்களின் நிலையும் கேள்விக் குறியே. வன்னியர் உள் ஒதுக்கீட்டின்படி சேர்க்கப்பட்டவர்களை நீக்கிவிட்டு, ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டின்படி மாணவர்களைச் சேர்க்கும்படி நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். அதனை முறையாகச் செயல்படுத்த வேண்டும்" என்றார். இந்நிலையில், பா.ம.க.வினர் போராட் டத்தில் இறங்கியுள்ளதால் இட ஒதுக்கீடு ரத்து விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு ஆயத்த மாகியுள்ளது.